Wednesday, February 24, 2010

உன்னோடு...


பயணத்தில் பேச்சுத்துணையாய்
பரிவோடு நீ வந்தாய்
பாதியிலே கோபித்து
முகம்திருப்பிக் கொள்கின்றாய்.
பணயத்தைத் தொடர்வதா - இல்லை
பரிந்துன்னைக் கெஞ்சுவதா
எனவிங்கு நான் குழம்ப
நீயோ தொடர்கின்றாய்
உனக்கந்தக் கவலையில்லை.

உன்
கோபம் சரியில்லை - அதில்
வேகம் குறைவில்லை - என்
மனதில் மறைவில்லை - அதை
உணர்ந்தால் தவறில்லை.

Friday, February 19, 2010

நீயும்


நீயும் எந்தன் பந்தம் - அதனால்
சாயும் எந்தன் இதயம் - ஆனால்
பாவம் நீயும் என்செய்வாய் - அதை
அறியா தென்னை மதிக்கின்றாய்

உனது கையில் இதுஇல்லை - என்
மனதின் இயல்பே இதுவானால் - அதை
உலையில் இடவும் துணிகின்றேன் - அது
முடிவில் எதனைத் தருமோசொல்

நீயா ரென்று புரிகிறதா?
புரியா விட்டால் மகிழ்வேன் நான்.
புரிந்தால் விலகிச் செல்வாயோ - அவ்
இழப்பை நானும் ஏற்பேனோ?

Thursday, February 11, 2010

நம்மைத் தேடி...


அழகைத் தேடுகின்றோம், அறிவைத் தேடுகின்றோம்; அமைதியைத் தேடுகின்றோம், இன்பத்தைத் தேடுகின்றோம்; பொன்னைத் தேடுகின்றோம், பொருளைத் தேடுகின்றோம். தேடியவற்றுள் சிலவற்றைப் பெற்று மகிழ்கின்றோம், பலவற்றைப் பெறாமல் தவிக்கின்றோம்.
எதைப் பெற்றோமோ பெறவில்லையோ, இந்தத் தேடல்களின் விரைல், வேகத்தில், தீவிரத்தில், தேடிச் சென்ற நாம் தொலைந்துவிட்டோம்-
ஆம். நம்மை நாம் இழந்துவிட்டோம்.
ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனாலும் இது உண்மை. இழந்த நம்மைத் தேடுகின்ற ஒரு முயற்சி, ஒரு பயணம்தான் 'நம்மைத் தேடி.'

-'நம்மைத் தேடி...' நூலின்
பதிப்புரையிலிருந்து








Wednesday, February 3, 2010

பக்தியும் ஞானமும்

தன்னை அழித்து அடைதல் ஞானம்
தனதை அழித்து அடைதல் பக்தி
தன்னை அழிக்கத் தனது அழியும்
தனதை அழிக்க அழியும் தானே.